கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி; பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்


கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி; பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:00 PM GMT (Updated: 10 Jan 2022 9:00 PM GMT)

கர்நாடகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போடும் பணி

சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்க விழா பெங்களூரு அடல்பிஹாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் 99 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிக்குள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். 77 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது, இந்த மாத இறுதிக்குள் 80 சதவீதமாக அதிகரிக்கப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்படும்.

முன்கள பணியாளர்கள்

சுகாதாரத்துறை பணியாளர்கள் தான் நாட்டின் உண்மையான காவலர்கள். ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கிறார்கள். சுகாதாரத்துறையினர் ஒவ்வொரு குடும்பத்தினரையும் காக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த ஊழியர்கள் பணியின்போது பல்வேறு தொந்தரவுகளை சந்திக்கிறார்கள். அவைகளை பொருட்படுத்தாமல் ஆஷா ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் உள்பட முன்களத்தில் உள்ள பணியாளர்கள் தங்களின் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டு கொள்வது தான். தொடக்கத்தில் சில நாடுகள் தடுப்பூசிகள் குறித்து குறைவாக பேசின. இதன் காரணமாக கொரோனா 2-வது, 3-வது அலைகள் வந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலேயே தடுப்பூசி போடுவது வெற்றிகரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவில் 130 கோடி பேர் உள்ளனர். இங்கு தடுப்பூசி இயக்கத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறோம்.

விமர்சனங்கள்

நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தரமானது. புரட்சிகரமான திட்டங்களுக்கு எப்போதும் தொடக்கத்தில் எதிர்ப்பு கிளம்புவது இயல்புதான். ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சரி, அது பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story