வேலைக்கு செல்லாமல் டி.வி. பார்த்ததை கண்டித்ததால் கத்தியால் குத்திக் கொண்டு வாலிபர் தற்கொலை


வேலைக்கு செல்லாமல் டி.வி. பார்த்ததை கண்டித்ததால் கத்தியால் குத்திக் கொண்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 2:42 AM IST (Updated: 11 Jan 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வேலைக்கு செல்லாமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரை மிரட்ட முயன்று உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் வேலைக்கு செல்லாமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரை மிரட்ட முயன்று உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

பெற்றோர் அறிவுரை

பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாதராயனபுரா 1-வது கிராஸ் பகுதியில் வசித்து வந்தவர் சையத் சாகில் (வயது 23). இவர், வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், நேற்று முன்தினம் காலையிலும் வீட்டில் இருந்து சையத் சாகில் டி.வி. பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லும்படியும், வீட்டில் இருந்து டி.வி. பார்ப்பதை தவிர்க்கும்படியும், சையத் சாகிலிடம், அவரது தந்தை கூறியுள்ளார்.

ஏற்கனவே சையத் சாகிலிடம் வேலைக்கு செல்லும்படியும், வீட்டிலேயே இருப்பது சரியல்ல என்றும், அவரது பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர். நேற்று முன்தினமும் அதுபோல் அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த சையத் சாகில் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்துள்ளார். பின்னர் தனது தாயிடம் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.

வாலிபர் சாவு

அதன்படி, சமையல் அறையில் காய்கறிகள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் தனது வயிற்றில் சையத் சாகில் குத்திக் கொண்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சோபாவில் சென்று படுத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், அவருக்கு வயிற்றில் பிளாஸ்திரி ஒட்டி விட்டுள்ளார். இருப்பினும் சையத் சாகில் ஆஸ்பத்திரிக்கு சென்று அவர் சிகிச்சை எடுக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், இரவில் திடீரென்று தனக்கு வயிறுவலிப்பதாக சையத் சாகில் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சையத் சாகில் மாற்றப்பட்டார். அங்கு சையத் சாகிலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

பெற்றோரை மிரட்டுவதற்காக...

தகவல் அறிந்ததும் ஜே.ஜே.நகர் போலீசார் விரைந்து சென்று சையத் சாகில் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது டி.வி. பார்ப்பதை தவிர்த்து வேலைக்கு செல்லும்படி பெற்றோர் அறிவுரை கூறியதால், அவர்களை மிரட்டுவதற்காக தன்னை தானே கத்தியால் குத்திய போது, எதிர்பாராத விதமாக சையத் சாகில் உயிர் இழந்தது தெரியவந்தது.

மேலும் கத்திக்குத்து காயத்திற்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறாததும், அவரது சாவுக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீசார், தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story