காங்கிரஸ் 2-வது நாளாக பாதயாத்திரை


காங்கிரஸ் 2-வது நாளாக பாதயாத்திரை
x
தினத்தந்தி 11 Jan 2022 3:06 AM IST (Updated: 11 Jan 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரசின் 2-வது நாள் பாதயாத்திரை நடைபெற்றது. டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரசின் 2-வது நாள் பாதயாத்திரை நடைபெற்றது. டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
 
144 தடை உத்தரவு

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்குமாறு வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் 10 நாட்கள் பாதயாத்திரை நேற்று முன்தினம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமத்தில் தொடங்கியது. முதல் நாளில் 15 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தொட்டஆலஹள்ளி கிராமத்தில் காங்கிரசார் தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் காங்கிரசார் 2-வது நாள் பாதயாத்திரையை தொடங்கினர். இந்த பாதயாத்திரையை தொடங்குவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாதயாத்திரை நடத்தக்கூடாது என்று எனக்கு அரசு நோட்டீசு அனுப்பியது உண்மை தான். அது சட்டப்படியான நோட்டீசு அல்ல. 144 தடை உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களின் பாதயாத்திரையை நிறுத்த அரசு திட்டமிட்டே விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. எங்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை கொடுக்கிறேன். நடவடிக்கை எடுக்கட்டும்.

கிண்டல் செய்துள்ளனர்

அதேபோல் பெங்களூருவில் பா.ஜனதாவினர் விதிகளை மீறியது குறித்த தகவல்களையும் வழங்குகிறேன். அதன் மீதும் அரசு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். உடல்நலக்குறைவு காரணமாக சித்தராமையா ஓய்வுபெற்று வருகிறார். அவர் நாளை(இன்று) பாதயாத்திரையில் கலந்து கொள்கிறார். நான் கால் தவறி தடுமாறியது குறித்து பா.ஜனதாவினர் கிண்டல் செய்துள்ளனர்.

முதல் நாளில் வனப்பகுதியில் ஒரே பாதை மட்டுமே இருந்தது. இன்று நாங்கள் மேற்கொள்ளும் பாதயாத்திரைக்கு 3 சாலைகள் உள்ளன. 
நேற்று (நேற்று முன்தினம்) இரவு உதவி கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரி ஆகியோர் என்னிடம் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினர். சளி மாதிரி எடுக்க அனுமதிக்குமாறு கேட்டனர். நான் நன்றாக, உறுதியாக உள்ளேன் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன். பாதயாத்திரையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அரசு சதி செய்கிறது.

100 டாக்டர்கள் உள்ளனர்

பாதயாத்திரையில் தொண்டர்களின் உடல்நிலையை கவனித்து கொள்ள 100 டாக்டர்கள் இங்கு உள்ளனர். அதனால் எங்களின் உடல்நிலையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஏற்கனவே மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். ஊரடங்கை அமல்படுத்தி மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தக்கூடாது.

எங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பாதயாத்திரையை விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார். நாங்கள் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். தைரியம் இருந்தால் எங்களை போலீசார் கைது செய்து கொள்ளட்டும். 
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

காற்றில் பறக்கும் கொரோனா விதிகள்

இந்த பாதயாத்திரையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியவில்லை. அதனால் இந்த பாதயாத்திரை மூலம் கர்நாடகத்தில் பெரிய அளவில் கொரோனா பரவக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 2-ம் நாள் பாதயாத்திரை கனகபுராவில் முடிந்தது. நேற்று இரவு அங்கேயே காங்கிரசார் தங்கினர்.

கொரோனா பரிசோதனை செய்ய டி.கே.சிவக்குமார் மறுப்பு

முதல் நாள் பாதயாத்திரை முடிந்ததும் கனகபுரா அருகே தொட்ட ஆலஹள்ளி கிராமத்தில் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் தங்கினர். அப்போது அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள், டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வந்தனர். ஆனால் அவர் தான் நலமாக இருப்பதாகவும், அதனால் தனக்கு பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி அந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிவிட்டாார். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

Next Story