ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் தொடர் போராட்டம்
ஈஞ்சம்பாக்கத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள்
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டி இருப்பதாக தனிநபர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீர்நிலை ஆக்கமிரப்பு வீடுகளை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த வருடம் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதை வாங்க குடியிருப்பு வாசிகள் மறுத்ததால் அவர்களது வீட்டின் வெளியே படிவத்தை ஒட்டிச்சென்றனர்.
சாலையில் அமர்ந்து போராட்டம்
இந்த நிலையில் நேற்று கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு சென்று நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை 3 நாளில் அகற்றும்படி நோட்டீஸ் வழங்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு, நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெத்தேல் நகர் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்கள் நோட்டீசை வாங்க மறுத்ததுடன், தங்களுக்கு இதே இடத்தில் வசிக்க பட்டா வழங்க வேண்டும் என கூறி பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுவீடாக சென்று சுவரில் நோட்டீசை ஒட்டிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
போலீசார் குவிப்பு
பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர் சுதர்சனம், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
ஆனால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story