18 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்


18 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jan 2022 6:25 PM IST (Updated: 11 Jan 2022 6:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 18 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 18 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக கலப்பட டீசல் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த டீசலை குறைந்த விலைக்கு வாங்கி படகுகளுக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கலப்பட டீசல்
அதன்பேரில் அவர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவரது தலைமையில் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள குடோனுக்கு சென்றனர். அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து பேரல்களில் கலப்பட டீசல் பிடிக்கப்பட்டு கொண்டு இருந்தது. உடனடியாக போலீசார் அந்த டீசலை பரிசோதனை செய்தனர். அது வழக்கமான டீசல் போன்று இல்லாமல் தரத்தில் வேறுபாடு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த டீசல் மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அங்கு இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 18 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல், டேங்கர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ரவிசங்கர் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் சமீபமாக அதிக அளவில் பிடிபட்டு வருகிறது. கடந்த 6 மாதத்தில் 5 லாரிகள் பிடிபட்டு உள்ளன. இந்த டீசலை பெரும்பாலும் படகுகளில் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த டீசலை பயன்படுத்தினால் படகின் என்ஜின் பழுதடைந்து விடும். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story