போலீசாரை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக வந்த மக்கள் ரேஷன், ஆதார் கார்டுகளை சாலையில் வீசியதால் பரபரப்பு


போலீசாரை கண்டித்து  தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக வந்த மக்கள்  ரேஷன், ஆதார் கார்டுகளை சாலையில் வீசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 7:20 PM IST (Updated: 11 Jan 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கண்டித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் ரேஷன், ஆதார் கார்டுகளை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்த 2 நபர்களை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு வழக்கு தொடர்பாக பிடித்து சென்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று முன்தினம் மீண்டும் அரண்மனைப்புதூருக்கு வந்தனர். அங்கே மேலும் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரண்மனைப்புதூரில் இருந்து பொதுமக்கள் சிலர் பாத்திரம், பாய், காலிக்குடங்கள் போன்ற உடைமைகளுடன் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலத்தில் சில பெண்கள் கைக்குழந்தையை தூக்கி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை அவர்கள் சாலையில் வீசி எறிந்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
போலீசார் தாக்குதல்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கூறுகையில், "ராமநாதபுரம் போலீசார் எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் பிடித்து சென்றனர். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். இந்நிலையில் எந்த குற்ற சம்பவங்களிலும் தொடர்பில்லாத 2 பேரை போலீசார் அழைத்து செல்ல வந்தனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசார் பொதுமக்களை தாக்கினர். இதில் 5 பேர் காயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களை தாக்கி விட்டு மேலும் 2 பேரை போலீசார் அழைத்து சென்றனர். எனவே பொதுமக்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்பு இல்லாத நபர்களை விடுவிக்க வேண்டும்" என்றனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அவர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story