காய்கறி பழக்கடைகள் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றம்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி, பழக்கடைகள் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு இன்று முதல் செயல்படுகிறது.
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி, பழக்கடைகள் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு இன்று முதல் செயல்படுகிறது.
பொதுமக்கள் கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 9-ந் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாட்கள் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் ஆய்வு செய்து மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உழவர் சந்தையில் செயல்பட்ட கடைகளை கூட்டுறவு சங்க வாகன நிறுத்தும் இடத்துக்கு இடமாற்ற உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முதல் அங்கு உழவர் சந்தை செயல்பட தொடங்கியது.
நகராட்சி மார்க்கெட்
அதுபோன்று ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கடைகள் நெருக்கமாக உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து கடைகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
இதையடுத்து மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி, பழக்கடைகள் மட்டும் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் மார்க்கெட்டில் உள்ள 141 காய்கறி கடைகள், 53 பழக்கடைகள் இந்த மைதானத்தில் செயல்படும்.
பள்ளி மைதானத்துக்கு மாற்றம்
மீதமுள்ள மளிகை கடைகள், பூக்கடைகள், துணிக்கடைகள், காலணி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மார்க்கெட்டியிலேயே செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க அந்த கடைகள் ஏ, பி என்று சுழற்சி முறையில் இன்று முதல் செயல்படுகிறது.
இதையடுத்து விளையாட்டு மைதானத்தில் நகராட்சி வருவாய் அதிகாரிகள், ஊழியர்கள் கடைகளை அமைப்பதற்கு குறிப்பிட்ட இடை வெளிவிட்டு அளவீடு செய்தனர். மேலும் 194 கடைகள் வைப்பதற்கு அளவீடு செய்து தரையில் கோடுகள் போடப்பட்டது. பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story