தனியார் நிதி நிறுவனத்தில் ரூ 1 கோடி மோசடி
மஞ்சூரில் தனியார் நிதிநிறுவனத்தில் தங்கத்துக்கு பதிலாக போலி நகையை வைத்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் கணக்காளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
மஞ்சூரில் தனியார் நிதிநிறுவனத்தில் தங்கத்துக்கு பதிலாக போலி நகையை வைத்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் கணக்காளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை மோசடி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றனர். இதற்கிடையே சிலரது கணக்கில் நகை அடகு வைக்காமலேயே அடகு வைத்ததற்கும், அதற்கு வட்டி செலுத்தாதது குறித்தும் நோட்டீஸ் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்துக்கு சென்று முறையிட்டனர். இதுகுறித்து தனியார் நிதி நிறுவனம் தணிக்கை செய்தது.
இதில் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் போலி ஆவணங்கள் உருவாக்கி பணத்தை எடுத்ததும், அடகு வைத்த தங்க நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
ஊழியர்கள் 4 பேர்
இதுகுறித்து நீலகிரி மேலாளர் ரவி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த சாந்திபிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜு, மஞ்சூர் அருகே பிக்கட்டியை சேர்ந்த கணக்காளரான நந்தினி (வயது 27), கணினி ஆப்ரேட்டரான கண்டிபிக்கை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29) ஆகிய 4 பேர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை 81 பேர் அடகு வைத்த நகையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி நகையை வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான நகையை ஏமாற்றி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பெண் கணக்காளரான நந்தினி, விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள சாந்திபிரியா, ராஜு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நிதி நிறுவனத்தில் நகை மோசடி சம்பவம் மஞ்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story