நாகையில் கரும்பு விற்பனை மும்முரம்
நாகையில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீர்வரிசை கொடுக்க கரும்பை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீர்வரிைச கொடுக்க கரும்பை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கரும்பு விற்பனை
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையன்று மக்கள், புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்டவைகளும் இடம்பெறும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு, பெண் வீட்டு சார்பில் பொங்கல் சீர்வரிசை கொடுப்பார்கள்.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாகை கடை தெரு, நிலா தெற்கு வீதி, நாலுகால் மண்டபம், பழைய பஸ் நிலையம், அவுரி திடல், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் சீர்வரிசை
நாகை கடைத்தெருவில் கரும்பு, வாழைத்தார் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக ஏராளமானோர் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். கார்களிலும், வேன்களிலும் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து கரும்பு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
மன்னார்குடி, திருக்காட்டுப்பள்ளி, மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக நாகைக்கு கொண்டு வருகிறோம்.
ஒரு கட்டு ரூ.300
கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.20-க்கு கொள்முதல் செய்தோம். இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளது. இதனால் தற்போது ஒரு கரும்பு ரூ.20 முதல் ரூ.25 வரை கொள்முதல் செய்கிறோம்.
இதுபோக ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவும் கூடுதலாக செய்கிறோம். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.35 முதல் ரூ.40 வரையிலும், ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகளின் வரத்து, விற்பனை ஆகியவற்றை பொருத்து விலையில் மாற்றம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story