குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பை கிடங்கு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூர் ஆகிய கிராமங்களுக்கான குப்பைகளை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த குப்பை கிடங்கு அமைக்க தேவனந்தல் ஊராட்சியில் மலை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடத்தின் அருகில் புனல்காடு, கலர்கொட்டாய், தேவனந்தல், வேடியப்பனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த குப்பை கிடங்கு அமைய உள்ள இடத்தை அளவீடு செய்து சமன் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த் துறையினர் கடந்த 8-ந் தேதி அங்கு சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு நிலம் அளவீடும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் நிலம் அளவீடு செய்ய அப்பகுதிக்கு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.
பொதுமக்கள் சாலைமறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பா.ம.க. மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்றும், நிலம் அளவீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர். இருப்பினும் ஒருபக்கம் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
காலை சுமார் 9.30 மணியில் தொடங்கிய மறியல் 11.30 மணியளவில் நிறைவடைந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கிடங்கு அமைய உள்ள இடத்தின் அருகில் சாலையோரத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பொதுமக்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் கிடங்கு அமைய உள்ள இடத்தில் குடியேற போவதாக அங்கு திரண்டு சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் சுமார் 10 பெண்களை பிடித்து இழுத்துசென்று கைது செய்ய போலீஸ் வேனில் ஏற்றினர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், குழந்தைகள் கதறி அழுதனர். இதையடுத்து அந்த வேன் புறப்பட்டு சென்றது. அதனை பொதுமக்கள் மறித்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைய செய்தனர்.
இதையடுத்து உதவி கலெக்டர் வெற்றிவேல், உதவி இயக்குனர் (பஞ்சாயத்துகள்) லட்சுமி நரசிம்மன், தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்போது நிலம் அளவீடும் பணி நிறுத்தப்படுவதாகவும், பொங்கலுக்கு பிறகு அமைதி கூட்டம் நடத்தப்பட்டு குப்பை கிடங்கு அமைவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பிடித்து வைத்திருந்த நபர்களை போலீசார் விடுவித்தனர்.
காலை சுமார் 9 மணியில் இருந்து மதியம் சுமார் 1.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தினால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story