ரூ.367 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி


ரூ.367 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி
x
தினத்தந்தி 11 Jan 2022 10:10 PM IST (Updated: 11 Jan 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், ரூ.367 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி இன்று(புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

நாகப்பட்டினம்:
நாகையில், ரூ.367 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி இன்று(புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அரசு மருத்துவக்கல்லூரி
நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.367 கோடியில் கட்டுமான பணிகள்
60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. 
ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.119.03 கோடி மதிப்பில் ஆஸ்பத்திரி, ரூ.124.77 கோடி மதிப்பில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
பணிகள் தீவிரம்
கொரோனா ஊரடங்கு காரணமாக, அவ்வப்போது கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. 
இதனிடையே தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, மத்தியக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து முடிவடைந்துள்ளது.
6 அடுக்குகள் 
6 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் மருத்துவக்கல்லூரி, ஆஸ்பத்திரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளிட்டவை உள்ளன. 
மேலும் உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்புவிழா
மருத்துவக்கல்லூரிகளுக்கான மத்தியக் குழு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பாட்டை தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாகை மருத்துவக்கல்லூரியின் திறப்பு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. 
மருத்துவக்கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Next Story