கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமெடுக்கும் தொற்று-ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
மிரட்டும் கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையில் பாதிப்பு குறைவாக இருந்தது. 2-வது அலையில் கடந்த ஆண்டில் பாதிப்பும், உயிர் இழப்புகளும் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் நாள் ஒன்றுக்கு பாதிப்பு 5 என்ற நிலையில் இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா 3-வது அலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகிறது.
127 பேர் பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 712 ஆகும்.
இதில் 43 ஆயிரத்து 809 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 541 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் தொடர் அறிவுரை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரில் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஓசூரிலும் தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, காந்தி ரோடு, ஏரித்தெரு, பாகலூர் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ராயக்கோட்டை சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனா வேகமெடுத்துள்ளது.
இதனால் கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்காக போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய வண்ணம் உள்ளனர். முககவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
Related Tags :
Next Story