சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் பங்கேற்க தடை
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நாளை நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்டஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 3-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று 9-ம் நாள் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது. பின்னர் 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. வழக்கமாக சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
முககவசம்
ஆனால் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைபடி நாளை நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 6 மணி முதல் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எனவே பக்தர்கள் அனைவரும் 6 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வந்து பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story