கொரோனா தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
வாலாஜா
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
கபசுர குடிநீர்
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர்கள் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை ஒரு வாரம் வரை வழங்குவார்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் தடுப்பூசியால் தான் தற்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது’’ என்றார்.
சிறப்பு மையம்
அதன்பிறகு வாலாஜா பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நோய்த்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் தயார் படுத்தப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது, அமைச்சரிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இம் மையத்தில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் சுமார் 700 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு அறைக்கு 6 படுக்கைகள் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கட்டிடத்தில் சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக தாலுகாக்கள்தோறும் ஒரு மையம் தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இவற்றில் வாலாஜா கல்லூரியில் 245 படுக்கைகளும், சோளிங்கர் சி.எம்.அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகளும், கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 120 படுக்கைகளும் அமைக்கப்படுகின்றன.
தாலுகா வாரியாக...
மேலும் அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 50 படுக்கைகளும், காவேரிப்பாக்கம் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகளும், விளாப்பாக்கம் மகாலட்சுமி கலைக் கல்லூரியில் 200 படுக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.தொற்று பாதிப்பைப் பொறுத்து இவை சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட ரமணன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன், அவைத் தலைவர் சரவணன், செயலாளர் ரகுராமன், வாலாஜா அக்பர் ஷரிப், செயலாளர் குமார் மேல்விஷாரம் முகமது அயூப், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story