விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி அதிரடி கைது
கடத்தூரில் விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தூர்:
கடத்தூரில் விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச மின் இணைப்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வெதரம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு இலவச மின் இணைப்பு பெற கடத்தூர் மின்வாரியத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இலவச மின் இணைப்பு வழங்க கோரி முருகன் கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் தர்மபுரியை சேர்ந்த வேடியப்பன் (வயது 39) என்பவரை அணுகினார்.
அப்போது அவர் மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். விவசாயி முருகன் ரூ.15 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி முதல் தவணையாக ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீதி தொகையை இணைப்பு கொடுத்த பின்னர் வழங்க வேண்டும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி முருகன் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
மின்வாரிய அதிகாரி கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ரசாயன பவுடர் தடவிய ரூ.12 ஆயிரத்தை முருகனிடம் கொடுத்து மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று சென்று வணிக ஆய்வாளர் வேடியப்பனிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் வணிக ஆய்வாளர் வேடியப்பனை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயியிடம் இலவச மின் இணைப்பு வ ழங்குவதற்காக மின்வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
---
Related Tags :
Next Story