மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்


மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 11 Jan 2022 11:37 PM IST (Updated: 11 Jan 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை:
கடும் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதி முறைகள் கடுமையான நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைக்குமா? என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விழாக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் மாடுபிடி வீரர்களும் அடையாள அட்டை பெற வேண்டும். குறிப்பிட்ட அளவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் உற்சாகமடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக உள்ளது.
வன்னியன் விடுதி
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் வருகிற 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் மறுநாள் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டிற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு, மாடுகள் வரிசையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகளும், மாடு பிடி வீரர்கள் களமாட இரு புறமும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. மேலும் மற்ற முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், ஆலங்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில்
8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பம்
கலெக்டர் கவிதாராமு தவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு தெரிவிக்கையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா 2021-ம் ஆண்டில் 120 கிராமங்கள் அரசிதழில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2022) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இதுவரையில் 8 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படவும், குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழாக்கள் விதிமீறல்கள் ஏதுமின்றி நடத்தப்படுவதை கண்காணிக்க கோட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்திடும் வகையில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story