பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா


பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
x
தினத்தந்தி 11 Jan 2022 11:47 PM IST (Updated: 11 Jan 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிபாளையம்:-
பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசி விழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி கரையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
நாளை காலை 4 மணிக்கு சுப்ரபாதம் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையும், 5.40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆதிகேசவ பெருமாளுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வேதமந்திரங்கள், சுப்ரபாதம் ஒலிக்க சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
கலவை சாதம்
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுடன் சேர்த்து வெண்பொங்கல், சாம்பார் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், மல்லி சாதம், கேரட் சாதம், மாங்காய் சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட பலவகை சாதம் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. மேலும் பால் பாயாசம், ரவா கேசரியும் கலவை சாதத்துடன் வழங்கப்படுகிறது.
26 ஆயிரம் லட்டுகள்
அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொள்ள விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 26-வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதை குறிப்பிடும் வகையில் 26 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
400 கிலோ சர்க்கரை, 10 கிலோ முந்திரி, 16 கிலோ நெய், 10 கிலோ திராட்சை, 3 கிலோ ஏலக்காய், 180 கிலோ கடலை மாவு, 165 லிட்டர் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தி 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 50 பணியாளர்கள் இரவு, பகலாக இந்த பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story