கணியூர் போலீஸ் நிலையம் பின்புறம் குப்பை கொட்டுவதில் பிரச்சினை


கணியூர் போலீஸ் நிலையம் பின்புறம் குப்பை கொட்டுவதில் பிரச்சினை
x
தினத்தந்தி 12 Jan 2022 12:23 AM IST (Updated: 12 Jan 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கணியூர் போலீஸ் நிலையம் இயங்குவதாகவும், குப்பை கொட்ட வந்த பணியாளர்களை தடுத்ததாகவும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குமரலிங்கம்
ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கணியூர் போலீஸ் நிலையம் இயங்குவதாகவும், குப்பை கொட்ட வந்த பணியாளர்களை தடுத்ததாகவும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கணியூர் போலீஸ் நிலையம்
மடத்துக்குளம் அருகே உள்ளது ஜோத்தம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலேயே மிகவும் பெரிய ஊராட்சியாகும். தற்போது கணியூர் போலீஸ் நிலையம் ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸ்நிலையம் வந்த பிறகும்கூட ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகளை தொடர்ந்து அங்கு தான் கொட்டி வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு வழக்கம்போல குப்பை கொட்ட வந்த துப்புரவு பணியாளர்களை கணியூர் போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்திவந்த ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து வைத்ததாகவும், துப்புரவு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர்.
 50 ஆண்டுகள்
இதுகுறித்து ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,  ஜோதம்பட்டி ஊராட்சியின் குப்பை கிடங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் உள்ளது. தற்சமயம் கணியூர் போலீஸ் நிலையம் இந்த குப்பைகிடங்கில்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் குப்பை கொட்ட சென்ற ஜோத்தம்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்களை கணியூர் போலீசார் தடுத்து நிறுத்தி இனிமே இங்கே குப்பை கொட்ட கூடாது என்றும், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்திவந்த குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து வைத்தும், பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர் என்றனர்.
 தடுக்கவில்லை
இதுபோல் கணியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் கூறுகையில், போலீஸ் நிலையம் உள்ள இந்த பகுதியில் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் முன்பு இங்கு குப்பை கொட்டி வந்தார்கள். இது ஒரு வண்டிப்பாதை குப்பை கொட்டும் கிடங்கு அல்ல. இங்கு பணிபுரியும் போலீசார் இங்கு வீசும் துர்நாற்றத்தினாலும், நோய்க்கிருமிகள் பரவுவதாலும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புக்கு  உள்ளாகின்றனர். தற்சமயம் கொரோனா பேரிடர் காலம் என்பதால்  மிகவும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இங்கு வரும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்து அதன்பின்பு இங்கு குப்பை கொட்டப்படாமல் இருந்தது. திடீரென்று ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் போலீஸ் நிலையத்திற்கு முன்பாகவே குப்பைகளை கொட்டி விட்டு சென்றுவிட்டனர். திடீரென்று நேற்று காலை வாகனங்களை போலீஸ் நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு சென்று விட்டார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களே வாகனத்தை எடுத்துச் சென்று விட்டனர். நாங்கள் யாரையும் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும், திடக்கழிவு கொட்டுவதற்கு என்று தனி இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்" என்றார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story