செங்காளிபாளையத்தில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


செங்காளிபாளையத்தில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 12:39 AM IST (Updated: 12 Jan 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

செங்காளிபாளையத்தில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

கரூர், 
பழங்கால கல்வெட்டுகள்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட செங்காளிபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் நிலத்தில் பழங்கால கல்வெட்டுகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இதுகுறித்து கூறியதாவது:- 
கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு புறத்தில் அமைந்துள்ள சிற்றூர் செங்காளிப்பாளையம். அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. 
சிவன், பெருமாள் கோவில்கள் 
இவ்வூரில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. சிவன் கோவிலில் செவ்வக வடிவிலான தனிக்கல்லின் ஒருபக்கத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்த எழுத்துவடிவில் 13 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முதல் 10 வரிகளில் தானம் பற்றிய செய்தியும், இறுதியாக உள்ள 3 வரிகளில் வடமொழி வாழ்த்து சுலோகமும் காணப்படுகிறது.
இந்த கல்வெட்டு கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்று அருங்காட்சியக துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இக்கல்வெட்டில் ஸ்ரீதென்னவன் வஞ்சிவேள் ரவிகுவான் என்பவனின் மனைவி நிறந்தேவி என்பவள் தன் கணவரிடமே 50 பொன் கொடுத்து விலைக்கு நிலம் பெற்று நிலத்தினை கீழ்குடையூர் சிவன் கோவில் மகாதேவருக்கு நந்தா விளக்கு எரிப்பதற்காகவும், திருஅமுது படைப்பதற்காகவும், தானமாக வழங்கிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
வேளிர் குலத்தலைவன்
இதில் வஞ்சி என்பது கருவூரை குறிக்கும் என்றும், வேள் என்பதற்கு ஒளிபொருந்திய தலைவன் அல்லது வேளிர் குலத்தலைவன் என்று பொருள் கொள்ளலாம் என்றும், வஞ்சி வேள் என்பது வஞ்சி நகரை ஆண்ட வேளிர் குலத்தலைவன் என்று பொருள்படும் என்றும் கூறப்படுகிறது. வஞ்சிமாநகரான கரூர் சிலகாலம் வேளிர் ஆட்சிக்குட்பட்டு இருக்கலாம். வஞ்சி ஆண்ட அந்த வேளிர் வஞ்சிவேள் என்று அழைக்கப்பட்டார்.
கரூர் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து கரூவூர் எனவும், வஞ்சி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இவை, கருவூர் பொன் வாணிகன் நத்தி அதிட்டானம் என்று புகழிமலை (தமிழ்- பிராமி) கல்வெட்டில் இருந்தும், கோ கலியன் மகன் கருவூரிடை தந்நாநிரை கொளல் எரிந்து பட்டான் என்ற கரூர் மாவடியான் கோவில் கல்வெட்டில் இருந்தும், ‘ஸ்ரீ வஞ்சிவேள் அடியான்' என்ற கரூர் நடுகல் கல்வெட்டில் இருந்தும்' வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை' என்ற புறநானூறு வரிகளில் இருந்தும் பண்டைய காலங்களில் இன்றைய கரூர், கரூவூர் என்றும் வஞ்சி என்றும் வழங்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை 
அதனடிப்படையில், இப்பகுதியில் உள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களை பாதுகாப்பாக, உடைந்துவிடாதபடி எடுத்து கரூர் அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் ஆய்வறிஞர்கள் மூலம் இந்த கல்வெட்டு மற்றும் இப்பகுதியினை ஆய்வுக்குட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story