சேமிப்பு கணக்கின் முதிர்வு பணத்தை கேட்டு மீனவ பெண்கள் பேராட்டம்


சேமிப்பு கணக்கின் முதிர்வு பணத்தை கேட்டு மீனவ பெண்கள் பேராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 1:47 AM IST (Updated: 12 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

பூத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம் முன் சேமிப்பு கணக்கின் முதிர்வு பணத்தை கேட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு:
பூத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம் முன் சேமிப்பு கணக்கின் முதிர்வு பணத்தை கேட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 மீனவர் கூட்டுறவு சங்கம்
கொல்லங்கோடு அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் மீன்வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த சங்கத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் சேமிப்பு கணக்கில் மாதம் ஒன்றுக்கு ரூ.205 வீதம் செலுத்தி வருகின்றனர். பின்னர், ஆண்டு இறுதியில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் சேர்ந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆக மீனவர்களுக்கு வழங்கப்படும்.
 முதிர்வு தொகை வழங்கப்பட்டது
கடந்த ஆண்டுக்கான சேமிப்பு தொகை நேற்று வழங்கப்பட்டது. அதற்காக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கூட்டுறவு சங்கத்திற்கு வந்து கையெழுத்திட்டு தொகையை பெற வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.  
இந்த நிலையில் மீன்பிடிக்க செல்லாமல் ஊரில் இருந்த மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு பணத்தை பெற்று சென்றனர். 
பெண்கள் போராட்டம்
ஆனால், பல மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றதால், அவர்கள் கையெழுத்திட வரமுடியவில்லை. அவர்களது உறவினர்கள், சேமிப்பு தொகையை நாங்கள் தான் செலுத்தி வந்தோம். ஆகையால், பணத்தை எங்களிடம் தரவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். 
இதையடுத்து முன்சிறை ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் தலைமையில் மீனவ பெண்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் கூடி அதிகாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிைள சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லவில்லை. 
இதைதொடர்ந்து சங்க அலுவலர்கள், கடலுக்கு சென்ற மீனவர்கள் கையெழுத்திட ஒரு மாதம் அவகாசம் தருவதாக கூறினர். அதில் உடன்படாத பெண்கள், மீனவர்கள் கையெழுத்து போட மாட்டார்கள், நாங்கள்தான் போடுவோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி ஆகியும் தொடர்ந்தது. இதனால், அதிகாரிகள் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அதிகாரிகளை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 
மீனவர் குறைதீர்க்கும் நாளில்...
அதைதொடர்ந்து நித்திரவிளை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் இன்பரசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்து தீர்வு காணும்படி கூறினார். 
அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story