பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு


பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 1:50 AM IST (Updated: 12 Jan 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதியில், பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த ஓட்டல் ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா: பத்ராவதியில், பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த ஓட்டல் ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பள்ளி மாணவி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பேப்பர் டவுனில் பாரந்தூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஓட்டலில் பெண் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளாள். அந்த சிறுமி, பத்ராவதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாள். 

இதேபோல் அதே ஓட்டலில் சிவமொக்கா தாலுகா நிதிகே கிராமத்தை சேர்ந்த உமேஷ்(வயது 28) என்பவரும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் சிறுமி பள்ளிக்கு செல்ல புறப்பட்டாள். 

கடத்தி கற்பழிப்பு

அப்போது உமேஷ், சிறுமியின் தாயிடம் தானும் ஒருவேலை விஷயமாக பத்ராவதிக்கு வர வேண்டியுள்ளது. அதனால் நாங்கள் 2 பேரும் சேர்ந்து செல்கிறோம் என்று கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் தனது மகளை, உமேசுடன் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி சிறுமியும், உமேசும் பஸ்சுக்காக காத்திருந்தனர். 

ஆனால் அப்போது உமேஷ், சிறுமியை மிரட்டி தரிகெரேவுக்கு செல்லும் பஸ்சில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் தரிகெரேயில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து உமேஷ், சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். 

வலைவீச்சு

ஆனாலும் மாலை வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த விஷயத்தை தாயிடம் கதறி அழுதபடி கூறினாள். இதைகேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.  இதற்கிடையே விஷயம் தெரிந்து உமேஷ் தலைமறைவாகிவிட்டார். 
இதுபற்றி பத்ராவதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த உமேசை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story