தனியார் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவால் 26 தொழிலாளர்கள் மயங்கினர்
மங்களூருவில் ரசாயன தொழிற்சாலையில் ரசாயன கசிவால் 26 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மங்களூரு: மங்களூருவில் ரசாயன தொழிற்சாலையில் ரசாயன கசிவால் 26 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் தொழிற்சாலை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பைக்கம்பாடி தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு தொழில்சாலைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் அதேபகுதியில் மீன் உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். உணவு பதப்படுத்துதல் பிரிவில் 26 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கொதிகலன்களில் இருந்து ரசாயன வாயு திடீரென கசிய தொடங்கியுள்ளது. இதனால் உணவு பதப்படுத்துதல் பிரிவு முழுவதும் ரசாயன வாயு பரவியது.
26 பேருக்கு மூச்சுத்திணறல்
இந்த நெடியை சுவாசித்த 26 தொழிலாளர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் பனம்பூர் போலீசார், முக்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த 26 தொழிலாளர்களையும் மீட்டு ஆம்புலன்சுகளில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த மற்ற தொழிலாளர்களை வெளியே அனுப்பினர். 26 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்
இந்த சம்பவம் பற்றி அறிந்தும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார், தனியார் தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story