சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த 28 பணியாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கடந்த 57 நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அத்துடன் உள்ளிருப்பு போராட்டம், காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதுவரை மீண்டும் பணி வழங்கப்படாததால் நேற்று திருச்சி அரசு மருத்துவமனை முன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துணைத் தலைவர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது, அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கஞ்சியை அங்கிருந்த பணியாளர்களுக்கு வழங்கினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த அரசு மருத்துவமனை போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட 13 பெண்கள் உள்பட 21 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story