செவிலியர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி


செவிலியர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 11 Jan 2022 8:47 PM GMT (Updated: 2022-01-12T02:17:02+05:30)

செவிலியர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி:

பெண் புகார்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவருடைய மனைவி மார்கிரேட் ஜெனிபர் (வயது 33). இவர் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்து ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் நர்சிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தேன். எனக்கு ஏற்கனவே அறிமுகமான திருவெறும்பூரை சேர்ந்த லாசர், வீரமலை, சுப்பிரமணி ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு அமைச்சராக இருந்த ஒருவர், தங்களுக்கு நன்கு பழக்கமானவர் என்றும், அவரிடம் கேட்டால் வேலை வாங்கி தருவார் என்றும் கூறினர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் கேட்டனர். நானும் எனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்தை வாங்கி கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாசர் உள்ளிட்ட 3 பேரிடம் கொடுத்தேன்.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று கூறி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி வேலையில் சேருமாறும், 6 மாதத்தில் வேலை உறுதியாகிவிடும் என்றும் கூறினர். நானும் வேலையில் சேர்ந்து பணியாற்றி வந்தேன். 3 மாதங்களுக்கு பிறகு, அரசு மருத்துவமனை ஒப்பந்ததாரர் என்னிடம் வந்து உங்களுக்கு தற்காலிக பணிதான் அளிக்கப்பட்டுள்ளது. இனி வேலைக்கு வரவேண்டாம், என்றார்.
மிரட்டல் விடுத்தனர்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், இது குறித்து லாசர், வீரமலை, சுப்பிரமணியிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அமைச்சர் ஊரில் இல்லை, வந்தவுடன் மீண்டும் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றுவதை தெரிந்து பணத்தை திருப்பி கேட்டபோது, தர மறுத்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவாக்குடி போலீசில் லாசர் உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்தேன். அப்போது நடத்திய பேச்சுவார்த்தையில் சிலமாதங்களில் ரூ.4 லட்சத்தை திருப்பி தருவதாக கூறினர்.
இதையடுத்து நான், எனது கணவருடன் அரசங்குடி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றபோது, லாசர் உள்ளிட்ட 3 பேரும் எங்களை வழிமறித்து புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர். இதையடுத்து துவாக்குடி போலீசில் மீண்டும் புகார் அளித்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதன்பிறகு சரிவர விசாரணை செய்யாமலும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமலும் உள்ளனர். ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story