சேலம், எடப்பாடி அருகே பரபரப்பு: 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் 2 கோவில்களிலும், எடப்பாடி அருகே ஒரு கோவிலிலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி,
மாரியம்மன் கோவில்
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி மணிகண்டன் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், அங்கிருந்த உண்டியல் திருட்டு போய் இருந்ததும் தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்டியல் உடைப்பு
சேலம் சீலநாயக்கன்பட்டி திடீர் நகர் பகுதியில் அற்புத காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாக பகுதியில் உண்டியலை பதித்து வைத்து இருந்துள்ளனர். இந்த நிலையில் கோவிலுக்கு நேற்று வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பணம், நகைகள் வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
திருட முயற்சி
மேலும் ஊத்துமலை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த உண்டியலை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றதுடன் சென்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
எடப்பாடி அருகே சம்பவம்
எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வினோத் என்பவர் பூசாரியாக உள்ளார். கடந்த 8-ந் தேதி கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் காலை நேரங்களில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகள், பொதுமக்கள் கோவிலில் தண்ணீர் ஊற்றி வழிபட்டு வருவார்கள்.
இதனால் கோவிலின் முன்புற கதவு மார்கழி மாதங்களில் பூட்டப்படாமல் இருக்கும். இந்தநிலையில் வினோத் தனது உறவினர் இறந்ததால் கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கோவிலில் தண்ணீர் ஊற்ற வந்தவர்கள் கோவிலின் உண்டியல் பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில் பூசாரி வினோத்திடம் தகவல் தெரிவித்தனர். இதனால் பூசாரி வந்து பார்த்து விட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி போலீசிலும் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உண்டியலை உடைத்தவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உண்டியலில் 5 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story