தூத்துக்குடி மீளவிட்டான் புதிய பாதையில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்


தூத்துக்குடி மீளவிட்டான் புதிய பாதையில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:41 PM IST (Updated: 12 Jan 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான 18 கிலோ மீட்டர் தூர புதிய ரெயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான 18 கிலோ மீட்டர் தூர புதிய ரெயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
புதிய ரெயில் பாதை
தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 1999- 2000-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரெயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில்வே போர்டுக்கு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை வரை 135 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
800 எக்டேர் நிலம்
இந்த புதிய ரெயில் பாதை திட்டம் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 175 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 800 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 400 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
இதில் மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான 90 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீதம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணி, கள ஆய்வுகள் முடிக்கப்பட்டு அறிக்கை சென்னைக்கு அனுப்பி பல்வேறு நிலைகளில் நடந்து வருகிறது.
சோதனை ஓட்டம்
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.260 கோடி செலவில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 4 வழிச்சாலையில் மேம்பாலம் உள்பட பல்வேறு பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பாதையில் நேற்று ரெயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் ரெயில் பாதை அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வே துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) நந்தகோபால் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. காலை 11.05 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின் 8½ நிமிடங்களில் மேலமருதூரை சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு 8½ நிமிடங்களில் மீளவிட்டானை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் 12 மணிக்கு முடிவடைந்தது.
வெற்றி
இதுகுறித்து துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) நந்தகோபால் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த பாதையில் ரெயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடியாக இந்த பாதையை ஆய்வு செய்வார். அதன்பிறகு இந்த ரெயில் பாதையில் ரெயில்களை இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். மேலமருதூரில் இருந்து மதுரை வரையிலான பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தால் 3 ஆண்டுகளில் புதிய ரெயில் பாதை திட்டம் முழுமையாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story