நாமக்கல்லில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி-காணொலி காட்சி மூலம் நரேந்திரமோடி திறந்து வைத்தார்


நாமக்கல்லில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி-காணொலி காட்சி மூலம் நரேந்திரமோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jan 2022 7:45 PM IST (Updated: 12 Jan 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல்:
நாமக்கல்லில் சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க, மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நிதியில் இருந்து, சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கொரோனா ஊரடங்கு நேரத்திலும், வடமாநில தொழிலாளர்களை கொண்டு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி நிர்வாக அலுவலகம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், முதல்வர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், கலையரங்கம் போன்றவை கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. 
அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணி மட்டும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு இக்கல்லூரியில் 100 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
பிரதமர் தொடங்கி வைத்தார்
இதற்கிடையே புதிய அரசு மருத்துவக்கல்லூரியை இன்று புதுடெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அவரது பேச்சு காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. 
இதையொட்டி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), சரஸ்வதி (மொடக்குறிச்சி), மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.


Next Story