விழுப்புரத்தில் ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
விழுப்புரத்தில் ரூ.4 கோடியில் நூலகம், அறிவுசார் மைய கட்டிடம், எரிவாயு தகன மேடை ஆகியவை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
வளர்ச்சி பணிகள்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நகராட்சித்துறை சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம், மகாராஜபுரம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் நகர்ப்புற எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அனைவரையும் வரவேற்றார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம், நகர்ப்புற எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இங்கு கட்டப்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடத்தில் பொது வாசிப்பு பகுதி, இளையோர் ஆயத்த பகுதி, பெண்கள் வாசிப்பு மற்றும் ஆயத்த பகுதி, பயிற்சி மையம், பாதுகாப்பு வைப்பறை, குழந்தைகள் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கற்றல் பகுதி, வரவேற்பு பகுதி, பார்வையாளர் அமரும் பகுதி, சி.சி.டி.வி. கேமரா கட்டுப்பாட்டு அறை, வை-பை வசதி, ஸ்மார்ட் கிளாஸ் போன்றவையும் இடம்பெற உள்ளது. மேலும் மகாராஜபுரத்தில் கட்டப்படும் நவீன எரிவாயு தகன மேடை தொழில்நுட்ப வசதிகளுடனும், வாகனம் நிறுத்தும் இடம், கழிவறை பகுதி, அமரர் ஊர்தி நிறுத்தும் இடம், பேவர் பிளாக் சாலை, 62.50 கே.வி.ஏ. மின் ஆக்கி வசதி, திரவ பெட்ரோலிய வாயு சிற்றுலையுடன் கூடிய வாயு உருளை, புகைப்போக்கி வசதிகள் போன்றவை அமையப்பெற உள்ளது என்றார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் 3 குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரண உதவியும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.புதுப்பாளையம் ஊராட்சி செயலாளர் பணியின்போது உயிரிழந்ததையடுத்து அவரது வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story