உழவர் சந்தைகளில் 80 டன் காய்கறிகள் விற்பனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 80 டன் காய்கறிகள் விற்பனையானது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 80 டன் காய்கறிகள் விற்பனையானது.
உழவர் சந்தை
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை அவர்களே சந்தைப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தனித்தனியாக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தினமும் காய்கறி மார்க்கெட் நிலவரத்தின்படி விலை நிர்ணயம் செய்வார். நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இதனால் விவசாயிகள், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பலன் அடைந்தனர்.
80 டன் விற்பனை
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகாராஜநகர், மேலப்பாளையம், டவுன் கண்டியப்பேரி, அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. நேற்று இந்த 4 உழவர் சந்தைகளிலும் மொத்தம் 80 டன் காய்கறிகள் விற்பனையானது. அதாவது ரூ.29 லட்சம் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
காய்கறிகள் விலை
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் 160 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் இங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இங்கு மட்டும் நேற்று 12 ஆயிரத்து 480 பேர் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.22 லட்சத்திற்கு 60 டன் காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளது.
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.38-க்கும், கத்தரிக்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.36-க்கும், புடலங்காய் ரூ.16-க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும், பூசணிக்காய் ரூ.30-க்கும், தடியங்காய் ரூ.18-க்கும், பச்சைமிளகாய் ரூ.70-க்கும், பாகற்காய் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், சின்னவெங்காயம் ரூ.62-க்கும், தேங்காய் ரூ.34-க்கும், மாங்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story