தலையை துண்டித்து பெண் படுகொலை


தலையை துண்டித்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 12 Jan 2022 9:00 PM IST (Updated: 12 Jan 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய பெண் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய பெண் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தனியாக வசித்து வந்த பெண்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம்  நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை. இவருடைய மனைவி பாப்பாத்தி அம்மாள் (வயது 62). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. சுடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாப்பாத்தி அம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டில் தொழிலாளியான முருகன் (42) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பாப்பாத்தி அம்மாள், முருகனுக்கு சித்தி உறவின் முறை என்று கூறப்படுகிறது.
இதனால் பாப்பாத்தி அம்மாள் பெயரில் உள்ள வீட்டை முருகன் தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு வந்தார். ஆனால், அவர் எழுதிக் கொடுக்க மறுத்து விட்டார்.
ரேஷன் கடைக்கு சென்றார்
நேற்று காலையில் முருகனின் மனைவி மகாலட்சுமி மற்றும் தாயார் வீடு தொடர்பாக பாப்பாத்தி அம்மாளிடம் பேசினார்கள். ஆனால் 2 பேரையும் அவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முருகன் ஆத்திரம் அடைந்தார்.
இதையடுத்து பாப்பாத்தி அம்மாளை தேடி அவரது வீட்டிற்கு முருகன் சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றது தெரியவந்தது.
பக்கத்தில் உள்ள பால்பண்ணை தெரு வழியாக தான் பாப்பாத்தி அம்மாள் வரவேண்டும் என்று நினைத்து முருகன் அங்கு காத்திருந்தார். ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொருட்கள் வாங்காமல் பாப்பாத்தி அம்மாள் திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
தலை துண்டித்து கொலை
பால்பண்ணை தெருவில் வந்தபோது, அவரை முருகன் வழிமறித்தாா். தனது தாயார், மனைவியை திட்டியது தொடர்பாக தகராறு செய்தார். மேலும், ஆத்திரம் அடைந்த முருகன், தான் மறைத்து வைத்து இருந்த கோடரியால் பாப்பாத்தி அம்மாளை சரமாரியாக கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தலை துண்டானது.
ஆத்திரம் தீராத முருகன் துண்டான தலையை எடுத்து பக்கத்து தெருவில் உள்ள பாப்பாத்தி அம்மாள் அண்ணன் வீட்டின் முன்பு வைத்துவிட்டுச் சென்றார்.
போலீசில் சரண்
பின்னர் முருகன் புளியரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த பாப்பாத்தி அம்மாள் உடலையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். 
செங்கோட்டை அருகே பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story