நீலகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது


நீலகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது
x
தினத்தந்தி 12 Jan 2022 4:09 PM GMT (Updated: 12 Jan 2022 4:09 PM GMT)

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டதன் மூலம் நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஊட்டி

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டதன் மூலம் நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நோய் பாதித்து அவசர சிகிச்சை மற்றும் விபத்து ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக மலைப்பிரதேசத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை ரூ.461.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா நடந்தது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ.க்கள் பொன் ஜெய சீலன், வானதி சீனிவாசன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

இந்தமருத்துவக்கல்லூரி மருத்துவமனை 19 தொகுப்பு கட்டிடங்களாக 8 லட்சத்து 89 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. தற் போது 2 கட்டிடங்கள் பணி முடிந்து உள்ளது. முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக 150 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறக்கப் பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- 

நீண்டகால கோரிக்கை

ஊட்டியில் உயர்தர சிகிச்சை இல்லாததால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே உயிரிழப்பு நிகழ்ந்தது. தற்போது திறக்கப்பட்டு உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு, பிசியோ தெரபி, உயர்தர சிகிச்சை உள்பட பல்வேறு நவீன வசதிகள் தொடங்கப் படுகிறது. 

இதன் மூலம் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கோவை, கேரளா மாநிலம் போன்ற இடங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இல்லை. இதனால் எங்கள் நீண்டகால கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

முன்னதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, இந்தியாவிலேயே தமிழகம் அதிக மருத்துவக் கல்லூரிகளை பெற்று உள்ளது. இதன் மூலம் 12 சதவீத இடங்கள் அதிகமாக கிடைத்து இருக்கிறது. நீட் தேர்வில் பா.ஜ.க. ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. நீட் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும். தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். முதலில் 6,000 மருத்துவ இடங்கள் இருந்தது. தற்போது 10,000 இடங்களாக அதிகரித்து உள்ளது என்றார்.


Next Story