ஊட்டியில் கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு


ஊட்டியில் கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 4:13 PM GMT (Updated: 12 Jan 2022 4:13 PM GMT)

ஊட்டியில் கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டார்.

ஊட்டி

ஊட்டியில் கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டார். 

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுமந்து போலீஸ் குடியிருப்பு கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டுப் பகுதியை நேற்று கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்க வேண்டும். வீடு, வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதித்து, சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்றும் பதிவேட்டில் பராமரிக்கப் படுகிறதா என்று சரிபார்த்தார். 

அபராதம் விதிக்க வேண்டும்

பூங்காவில் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:- 

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே வருகிறார்களா, உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 முன்னதாக கலெக்டர் எஸ்.பி.அம்ரித் புதுமந்து ரேஷன் கடையில் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.


Next Story