ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா


ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 4:16 PM GMT (Updated: 12 Jan 2022 4:16 PM GMT)

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுதது அங்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப் பட்டது.

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுதது அங்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப் பட்டது.

உடல்நலக்குறைவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, தமிழகம் மாளிகை பூங்காக்களில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதற்கிடையே சென்னை சென்று திரும்பிய பூங்கா கண்காணிப்பாளர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

15 பேருக்கு கொரோனா 

தொடர்ந்து பூங்கா பணியாளர்கள், ஊழியர்கள் என 150 பேருக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேத்தி, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வந்து சென்றனர். 

எனவே அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களுக்கும் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாவரவியல் பூங்கா பணியாளர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கிருமிநாசினி தெளிப்பு

ஊட்டி நகராட்சி மூலம் பெல் மிஸ்டர் வாகனம் மூலம் நுழைவுவாயில், பூங்காவுக்குள் உள்ள சாலைகள், அலுவலக பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புல்வெளிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டு, இருக்கைகளில் அமரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் ஊழியர்கள் பணியாளர்கள் ஆங்காங்கே வழிகளில் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவில் பணியாளர்களுக்கு தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story