தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 4:23 PM GMT (Updated: 12 Jan 2022 4:23 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


சாலையில் தேங்கும் கழிவுநீர் 

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் 11-வது வார்டு மணிக்கூண்டு அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லுபவர்கள், நடந்து செல்லுபவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கலீல் ரகுமான், கோட்டூர்.

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

மானூர் யூனியன் கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட துறையூர் மற்றும் மாவு மில் பஸ் நிறுத்தம் அருகே மின்விளக்குகள் உள்ளது. ஆனால், அந்த மின்விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. அந்த பகுதிகள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் இந்த இரு இடங்களிலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்க உயர்கோபுர மின்விளக்கு அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பேச்சிமுத்து, துறையூர்.

நீர்த்தேக்க தொட்டி தூணில் விரிசல்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் இனாம் வெள்ளகால் பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள தூண்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு எப்போதும் வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், டிரான்ஸ்பார்மர்களும் உள்ளன. நீர்த்தேக்க தொட்டி விரிசலை சரிசெய்யக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்கு முன்னர் நீர்த்தேக்க தொட்டி தூணில் உள்ள விரிசலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
சக்திவேல், கடையாலுருட்டி.

பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? 

சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் உள்ள காங்கிரீட் சிலாப்புகளில் இருந்து சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுகிறது. அப்போது, அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் மீது சிமெண்டு பூச்சுகள் விழுந்து காயம் ஏற்படுகிறது. காங்கிரீட் கம்பிகளும் கீழே தொங்கிக் கொண்டு இருக்கிறது. மேலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்து விரிசலுடன் காணப்படுகிறது. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துயாதவ், சங்கரன்கோவில்.

நாய்கள் தொல்லை

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் மேலவூரில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன் கருதி நாய்களை பிடித்துச் செல்ல சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், செட்டிகுளம் மேலவூர்.

ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

கடையம் அருகே அருணாசலம்பட்டியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த ரேஷன் கடை கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டுகிறேன்.
கந்தன், மயிலானூர். 

பூங்கா அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தினசரி காய்கறி சந்தை பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. தற்போது, இந்த அங்கன்வாடி மையத்தின் பின்புறம் உள்ள இடம் காலியாக முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் முட்செடிகளை அகற்றிவிட்டு, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்காக பூங்கா அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்துராஜ், திருச்செந்தூர்.

Next Story