நடுவட்டம் அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் மீண்டும் பள்ளம் தோண்டி தடை


நடுவட்டம் அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் மீண்டும் பள்ளம் தோண்டி தடை
x
தினத்தந்தி 12 Jan 2022 4:27 PM GMT (Updated: 12 Jan 2022 4:27 PM GMT)

நடுவட்டம் அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் மீண்டும் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலூர்

நடுவட்டம் அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் மீண்டும் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மயானத்துக்கு செல்லும் பாதை

ஊட்டி தாலுகா நடுவட்டம், பெல்வியூ, டி.ஆர். பஜார் உள்பட பல கிராமங்கள் உள்ளன. பெல்வியூ பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் மயான நிலம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் மறித்தனர். அத்துடன் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. 

இது குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி ஊட்டி, கூடலூர் பகுதியில் ஆய்வு நடத்திய சட்டமன்ற பொது கணக்கு குழு பேரவையுடன் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தி மயான பகுதிக்கு செல்லும் பாதையில் உள்ள பள்ளத்தை மூடினார்கள். 

மீண்டும் பள்ளம் 

இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு மயான நிலத்துக்கு செல்லும் பாதையில் மீண்டும் பள்ளம் தோண்டி மறிக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறை யினரிடம் புகார் தெரிவித்தனர். 

ஆனால் இதுவரை மயானத்துக்குச் செல்லும் பாதையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளதுடன் மாவட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடும் நடவடிக்கை

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, மயான நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் தொடர்ந்து பாதையின் குறுக்கே பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. 

எனவே அதிகாரிகள் இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அந்த பள்ளத்தை மூடுவதுடன், இதுபோன்று சாலையை மறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


Next Story