70 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் குறையவே இல்லை.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மேலும் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 826 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக முழுக்கொள்ளளவில் நீடிப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணையில் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் மதுரை, தேனி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story