11 மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்


11 மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jan 2022 4:52 PM GMT (Updated: 12 Jan 2022 4:52 PM GMT)

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை நேற்று காணொலி காட்சி மூலம் மோடி திறந்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக உள்கட்டமைப்பு மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்படும் எனவும் இந்த விழாவில் அவர் அறிவித்தார்.

விருதுநகர்,
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை நேற்று காணொலி காட்சி மூலம் மோடி திறந்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக உள்கட்டமைப்பு மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்படும் எனவும் இந்த விழாவில் அவர் அறிவித்தார்.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா 
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு உள்ளன.
சுமார் ரூ.4 ஆயிரத்து 80 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில் மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி ஆகும்.
இந்த மருத்துவ கல்லூரிகளுக்கான திறப்பு விழாவை விருதுநகரில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா 3-வது அலை பரவல் அதிகரித்து வருவதால், மோடி, ஸ்டாலின் விருதுநகர் வருகை ரத்தானது. ஆனால் அறிவித்தபடி இந்த விழா நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. 
மோடி திறந்து வைத்தார்
மாலை 4 மணி அளவில் நடந்த இந்த விழாவில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி கலந்துகொண்டார். 
ெசன்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கினார்.மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வரவேற்று பேசினார்.  கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 
தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மையம்
மேலும் அவர், சென்னையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் ரிமோட் மூலம் திறந்து வைத்தார். 
பின்னர் பிரதமர் மோடி பேசிய போது, தமிழில் வணக்கம் 
தை பிறந்தால் வழி பிறக்கும் 
என்று தெரிவித்து தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
பொங்கல் வாழ்த்து 
தமிழக மக்களுக்கு பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
தமிழகத்தில் இன்று 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோன்று பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழியின் செம்மொழி இயக்க கட்டிடத்தையும் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 
மத்திய அரசு நாட்டில் மருத்துவத்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் கடந்த 7½ ஆண்டுகளுக்கு முன்பு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 596-ஆக உயர்த்தி உள்ளோம்.
எனது சாதனையை முறியடித்துள்ளேன்
54 சதவீதம் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 7½ ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. மருத்துவ பட்டதாரிகளாக ஒரு ஆண்டில் 82 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று வந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 
இது 80 சதவீத அதிகரிப்பாகும். நான் ஒரே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளேன். அந்த எனது சாதனையை இப்போது முறியடித்து, தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்துள்ளேன்.
விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 2 முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2014-ல் 7 ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும், இ்ப்போது 22-ஆக உயர்ந்துள்ளது. சுகாதார சேவையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமரின் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவச் செலவு மிகவும் குறையும்.
நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுஷ்மான் திட்டத்திற்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இது, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதனை கூடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்க உதவும்.
செம்மொழி கட்டிடம்
புராதன மொழியான தமிழ் மொழிக்கான மத்திய அரசின் செம்மொழி ஆராய்ச்சி கட்டிடத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை ஆய்வு செய்ய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனியாக ஒரு இருக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
திருக்குறளை குஜராத்தி மொழியில் மொழி பெயர்த்துள்ளதால் குஜராத்தி மக்களும் திருக்குறளின் பெருமையை உணர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை இருப்பதை கண்டு பெருமிதம் அடைந்தேன். 
தாய்மொழியில் என்ஜினீயரிங்
என்ஜினீயரிங் போன்ற படிப்புகளை தாய்மொழியில் கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும். 
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் செழுமை என்னை எப்போதும் ஈர்க்கிறது. ஐ.நா.சபையில் உலகின் மிக தென்மை வாய்ந்த ெமாழியான தமிழ் மொழியில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.
டாக்டர்கள் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை. இந்த இடைவெளியை குறைக்க முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் தரமான குறைந்த செலவிலான சிகிச்சைக்கு உரிய இடமாக இந்தியாவை மாற்றுவதே எனது கடமை. மருத்துவ சுற்றுலாவுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ளன. இது நமது டாக்டர்களின் திறன் அடிப்படையில் ஏற்பட்டதாகும். 
தமிழக மாணவர்கள்
தமிழகத்தை பொறுத்தமட்டில் தொழில்நுட்ப மாணவர்கள் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் நாட்டை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும். 
நாடு முன்னேற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதிலும் முக்கியமாக தற்போது கொரோனா தொற்று இருப்பதால் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக முக கவசம் அணிவதை ஒரு கடமையாக கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம். 
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story