மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் + "||" + Specialized medical camp in the areas where the trainee doctors stayed

சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்

சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்
சிதம்பரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என்று 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து  மருத்துவ கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதி, கே.ஆர்.எம். விடுதி, சி. கொத்தங்குடி பகுதியில் உள்ள மகளிர் சுகாதார தொழில்முறை விடுதி ஆகிய விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த 3 விடுதிகளையும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார அதிகாரிகள் முகாமிட்டு, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

இந்நிலையில் இந்த பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் சிவக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 

வட்டார மருத்துவ அலுவலர் சி.மங்கையர்க்கரசி தலைமையில் டாக்டர் சாருமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வநாதன், தமிழ்வாணன், மருந்தாளுநர் சத்யா, பேரூராட்சி அலுவலர்கள் பழனி, கமல் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை சோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். 

அபராதம்

மேலும் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள உணவகங்கள், கடைகளில் முக கவசம் அணியாமல் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.