பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பழனி:
தைப்பூச திருவிழா
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, மலைக்கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக காலை 7.10 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்றது.
கோவில் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம், கொடிப்பட பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்புக்கட்டு நடைபெற்றது.
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதையடுத்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
காப்புக்கட்டு
அதையடுத்து கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொரோனா பரவல் இருந்த போதிலும் கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக பழனியில் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது.
இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருவிழாவையொட்டி மதியம் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள் ஆகியோருக்கு காப்புகட்டு நடந்தது.
குவியும் பக்தர்கள்
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், பொறியாளர்கள் குமார், பாலாஜி, கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பூஜைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
விழாவில் 17-ந்தேதி இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், 18-ந் தேதி தைப்பூசம் ஆகும். அன்றைய தினம் சண்முகநதியில் தீர்த்தம் வழங்குதல், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 21-ந் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை தைப்பூச நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவாரம் கிரிவீதிகளில் ‘அரோகரா’ கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் கிரிவலம் வந்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story