ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு தொற்று; பெண் பலி
ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரே நாளில் புதிதாக 330 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரே நாளில் புதிதாக 330 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
3-வது அலை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அசுர வேகத்தில் பரவும் தொற்று காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஏற்கனவே 2-வது அலை பெரும் பாதிப்பையும், அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தியது பொதுமக்கள் மனதில் மறையாத வடுவாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்திருப்பது மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு தினமும் கூடுதலாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
330 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 242 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 92 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது 1,019 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு ஒரு பெண் பலியாகி உள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் தொற்று பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 713 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story