விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் பெயர் மாற்ற 268 பேர் பதிவு
பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் பெயர் மாற்ற 268 பேர் பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் பெயர் மாற்ற 268 பேர் பதிவு செய்தனர்.
சிறப்பு முகாம்
விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான சிறப்பு முகாம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தொடங்கி வைத்தார். இதில் செயற்பொறியாளர் செந்தில்வேல், உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், அன்புமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று அங்கலகுறிச்சி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தொடங்கி வைத்தார். இதில் செயற்பொறியாளர் ராம்பிரகாஷ், உதவி செயற்பொறியாளர்கள் ராஜகோபாலன், தேவானந்த் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பெயர் மாற்ற விண்ணப்பம்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ள 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 2021-22-ன் கீழ் 1.4.2003 முதல் 31.3.2013 வரை சாதாரண வரிசையில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கும், 1.4.2013 முதல் 31.3.2014 வரை சுயநிதி(ரூ.10 ஆயிரம்) திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கும், மேலும் 1.4.2013 முதல் 31.3.2018 வரை சுய நிதி(ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம்) திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கும் பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் பெயர், சர்வே எண் மாற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி கோட்டத்தில் பெயர் மாற்ற 222 பேரும், சர்வே எண் மாற்ற 69 பேரும் விண்ணப்பித்தனர். மேலும் விவசாய மின் இணைப்பிற்கு 103 பேர் தயார் நிலை பதிவு செய்தனர். அங்கலகுறிச்சி கோட்டத்தில் பெயர் மாற்ற 46 பேரும், சர்வே எண் மாற்ற 21 பேரும் விண்ணப்பித்தனர். மின் இணைப்பிற்கு 77 பேர் தயார் நிலை பதிவு செய்தனர். பதிவு செய்ததின் அடிப்படையில் விரைவில் அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story