குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல நாளை முதல் தடை


குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல நாளை முதல் தடை
x
தினத்தந்தி 12 Jan 2022 5:17 PM GMT (Updated: 12 Jan 2022 5:17 PM GMT)

டாப்சிலிப், வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

டாப்சிலிப், வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்தார். 

குரங்கு நீர்வீழ்ச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி டாப்சிலிப், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-
பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள கவியருவியில்(குரங்கு நீர்வீழ்ச்சி) நீர்வரத்து குறைந்து உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழக அரசின் அரசாணைப்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையொட்டி வால்பாறை வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் டாப்சிலிப்பிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

மற்ற நாட்களில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்கப்படும். டாப்சிலிப்பை பொறுத்தவரை கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலை உள்ளதால் அதை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வளர்ப்பு யானை முகாமில் உள்ள யானைகளுக்கு சுற்றுலா பயணிகளிடம் இருந்து தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்குவதற்கு முன்பதிவு செய்த வாகனங்களை தவிர நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 75 வாகனங்களுக்கு மட்டுமே சேத்துமடை வனத்துறை சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story