ஓட்டலுக்கு சாப்பிட வந்தவரிடம் தகராறு செய்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது
ஓட்டலுக்கு சாப்பிட வந்தவரிடம் தகராறு செய்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் போலீஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று துடியலூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 38), அவரது நண்பர் தீபக் (35) ஆகியோர் சாப்பிடச்சென்றனர். இதில் தீபக் நேர்த்திக்கடனுக்காக மாலை அணிவித்து இருந்தார்.
இதனால் அவர் சாப்பிடுவதற்கு சைவம் கேட்டுள்ளார். ஆனால் ஓட்டல் ஊழியர் அசைவ உணவை பரிமாறியதாக தெரிகிறது.
இதனால் சரவணக்குமார், தீபக் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஓட்டல் உரிமையாளரும், போலீஸ்காரருமான கிஷார் (46), சாப்பிட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த கிஷோர், சரவணக்குமார், தீபக்கை தாக்கியதாக தெரிகிறது.
இதுகறித்து சரவணக்குமார், தீபக் ஆகியோர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிஷோரை கைது செய்தனர்.
கிஷோர் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story