கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை


கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2022 5:39 PM GMT (Updated: 12 Jan 2022 5:39 PM GMT)

ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.

ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.
கடத்தல்
ஈரோடு கருங்கல்பாளையம் குயிலாந்தோப்பு மரப்பாலம் 3-வது வீதியை சேர்ந்தவர் எஸ்.வி.எல்.சிவா என்கிற சிவசுப்பிரமணியம் (வயது 57). இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வ.உ.சி. மைதானத்திற்கு நடை பயிற்சிக்காக சிவசுப்பிரமணியம் சென்றார். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. அந்த கும்பல் ரூ.25 லட்சம் கேட்டு சிவசுப்பிரமணியத்தை மிரட்டியது.
பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவதாகவும் கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். அவரை எங்கும் அழைத்து சென்று அடைத்து வைக்காமல் காரிலேயே சுற்றி வந்தனர்.
ரூ.15 லட்சம்
அதன்பிறகு சிவசுப்பிரமணியம் தனது நண்பர் கண்ணன் மூலமாக ரூ.15 லட்சத்தை தயார் செய்து கடத்தல் கும்பலிடம் கொடுத்தார். இதையடுத்து சிவசுப்பிரமணியத்தை கடத்தல் கும்பல் பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில் விடுவித்தது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருங்கல்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், தர்மராஜ், ராஜன், கவுரிசங்கர் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மீட்டனர்.
போலீஸ் காவல்
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கோவை மாவட்டம் சத்திசாலை சாஸ்திரி நகரை சேர்ந்த பிரபு என்கிற குண்டுபிரபு (47) கடந்த 5-ந் தேதி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் பிரபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன்சத்திரம் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து ஈரோடு முதலாம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். பிரபுவை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் பிரபுவை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. அதன்பிறகு நேற்று மாலை பிரபு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story