புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் போட்டி: தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பெயர் பதிவு


புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் போட்டி: தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பெயர் பதிவு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:40 PM GMT (Updated: 12 Jan 2022 5:40 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் போட்டியாக தச்சங்குறிச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பெயர் முன்பதிவு செய்தனர்.

கந்தர்வகோட்டை:
ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த கடும் கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. 
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். தற்போது அனுமதி தாமதமாக கிடைத்ததால் இன்று (வியாழக்கிழமை) காலை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
மாடுபிடி வீரர்கள்
இந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் நேற்று ஆர்வமுடன் தங்களது பெயரை முன்பதிவு செய்தனர். தச்சங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பெயர் பதிவு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருச்சி, தஞ்சாவூர் உள்பட பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் வந்து பெயர் பதிவு செய்தனர். 
அப்போது கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கினர். இதேபோல காளைகளின் உரிமையாளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டன. மொத்தம் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்க அதிகாரிகளும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல்...
கந்தர்வகோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டிற்கான வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story