நல்லம்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியுடன் ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்-ரகசிய அறையில் கடத்தியது கண்டுபிடிப்பு
நல்லம்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் ரகசிய அறையில் கடத்தப்பட்ட ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
நல்லம்பள்ளி:
கன்டெய்னர் லாரி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே முண்டாசுபுறவடையில் அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையோரம் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரற்று நின்றது.
அந்த லாரியை போலீசார் திறந்து சோதனை செய்தபோது, அது காலியாக இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கன்டெய்னரின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதியை அளவீடு செய்தனர். அப்போது வெளிப்பகுதியை விட, உள்பகுதியின் அளவு குறைவாக இருந்தது.
ரகசிய அறையில் குட்கா
இதையடுத்து போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அதில், வெல்டிங் செய்யப்பட்ட நிலையில் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த ரகசிய அறையை திறந்து பார்த்தனர். அப்போது 40 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததும், அவை பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதையடுத்து 40 மூட்டைகளில் இருந்த குட்கா, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story