பொங்கல் விழாவையொட்டி கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகம் விலை கிடுகிடு உயர்வு


பொங்கல் விழாவையொட்டி கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகம் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:43 PM GMT (Updated: 12 Jan 2022 5:43 PM GMT)

பொங்கல் விழாவையொட்டி கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கறம்பக்குடி:
வாரச்சந்தை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் கோழி சந்தை பிரபலம் என்பதால் வாரம்தோறும் வெளிமாவட்டங்களில் இருந்தும் கோழிகளை வாங்க, விற்க என ஏராளமானோர் கறம்பக்குடிக்கு வந்து செல்வார்கள். விவசாயத்துடன் ஆடு, கோழி வளர்ப்பும் கறம்பக்குடி பகுதியில் முக்கிய தொழிலாக இருப்பதால் கறம்பக்குடி கோழி சந்தைக்கு மவுசு அதிகம்.
கிடுகிடுவென உயர்வு 
இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பொங்கல் திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு கறம்பக்குடியில் நேற்று நடைபெற்ற சந்தையில் கோழிகளுக்கு கிராக்கி ஏற்பட்டது. கோழிகள் வரத்து அதிகம் இருந்தபோதும் வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்ததால் போட்டி போட்டு கோழிகளை வாங்கினார்கள். இதனால் பெட்டை கோழிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ உயிருள்ள கோழி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை ஆன நிலையில் நேற்றைய சந்தையில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை ஆனது. அதேவேளை சேவல் கோழி ரூ.300 வரை மட்டுமே விலைபோனது. பெட்டை கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் அதை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இடைத்தரகர்கள் ஆக்கிரமிப்பு 
இதுகுறித்து கோழிகளை விற்க வந்த விவசாயி ஒருவர் கூறுகையில், மாட்டு பொங்கல் நாளில் வீட்டில் சாமி கும்பிடுவது பெரும்பான்மையான குடும்பங்களில் வழக்கம். அன்று அசைவ உணவு வகைகள் படையல் செய்யப்படும். இதனால் பொங்கல் வந்தால் நாட்டுக்கோழிகளுக்கு கடும் கிராக்கி ஏற்படும். தற்போது பெட்டை கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்து உள்ளது. இருப்பினும் கோழிகளின் உரிமையாளர்களை விட இடைத்தரகர்கள் சந்தையை ஆக்கிரமித்து நல்ல லாபம் பார்த்து விடுகின்றனர், என கூறினார்.

Next Story