இன்று சொர்க்கவாசல் திறப்பு: மோகினி அலங்காரத்தில் பெருமாள் திரளான பக்தர்கள் தரிசனம்
மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பெருமாள் மோகினி அலங்காரத்தில் நேற்று மாலை புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சொர்க்கவாசல் திறக்கப்படும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கும், சொர்க்கவாசலை கடந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இதேபோல் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. 4 மணிக்கு சத்தியமூர்த்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மோகினி அவதாரம், விஸ்வரூப தரிசனம், ராஜா அலங்காரம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வந்து ஆழ்வார் மோட்சம் கொடுக்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சத்தியமூர்த்தி பெருமாள் அதன்வழியே பவனி வருவார். சொர்க்கவாசல் திறப்பின்போது கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியில்லை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பொன்னமராவதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு 7.20 மணியளவில் பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story