கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் மாடுவிடும் விழா ரத்து. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் மாடுவிடும் விழா ரத்து செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் மாடுவிடும் விழா ரத்து செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.
கட்டுப்பாடுகள்
வேலூர் மாவட்டத்தில் மாடுவிடும் விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நம்முடைய பண்பாடு, கலாசாரம் மற்றும் ஊரின் கவுரவத்திற்காக மாடு விடும் விழா நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் விழாக்குழுவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மாடுவிடும் விழா ரத்து
மாடுவிடும் விழா நடைபெறும் இடம் பெரிய மைதானமாக காலி இடமாக இருக்க வேண்டும். பார்வையாளர்கள் 150 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. ஒருவேளை பெரிய கிராமமாக இருந்தால் வெளியூர்காரர்கள் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது. காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே காளைகளை விட வேண்டும்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் காளை விட அனுமதிக்க மாட்டோம். ஒரு விழாவில் 100 காளைகளுக்கு மேல் ஓட விட வேண்டாம். விழாக்குழுவினர் ஒரு காளையை ஒரே ஒருவிழாவில் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.
மாடுவிடும் விழா மூலம் கொரோனா மேலும் பரவி விடக்கூடாது. இதில், விழாக்குழுவினர் முழுக்கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மாடுவிடும் விழாவின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தொற்று விதிமுறைகளை மீறினால் மாடுவிடும் விழா ரத்து செய்யப்படும். ஒரு கிராமத்தில் விதியை மீறினால் அடுத்து விழா நடத்த அனுமதி வழங்க மாட்டோம்.
ஒற்றுமையுடன்...
ஜல்லிக்கட்டு, மாடுவிடும் விழா போன்றவற்றை நடத்த அனுமதிக்கக்கோரி எப்படி ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டீர்களோ, அதேபோல் கொரோனா பரவாமல் கட்டுக்கோப்புடன் மாடுவிடும் விழா நடத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
கூட்டத்தில், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன், மாடுவிடும் விழாக்குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story