சிராவயல் மஞ்சுவிரட்டை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள்
தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி சிராவயல் மஞ்சுவிரட்டை சிறப்பாக நடத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பத்தூர்,
தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி சிராவயல் மஞ்சுவிரட்டை சிறப்பாக நடத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்தார்.
சிராவயல் மஞ்சுவிரட்டு திடல் ஆய்வு
திருப்பத்தூர் அருகே சிராவயல் பகுதியில் தை பொங்கல் விழாவையொட்டி வருகிற 17-ந்தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் காளைகள் அவிழ்த்து விடும் பகுதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசாணை
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிராவயல் பகுதியில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு என்பது புகழ்பெற்ற விளையாட்டாகவும், கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக உள்ளதால் அதை கருத்தில் கொண்டு நோய் பரவுதலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பாரம்பரிய இந்த விளையாட்டு நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு பொதுவாக தை மாதம் 3-ந்தேதி நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் முழு ஊரடங்கு காரணமாக மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு நடத்த ஏற்பாடுகளை செய்து வரும் சிராவயல் மஞ்சுவிரட்டு கமிட்டினயிருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஒத்துழைப்பு
மேலும் அன்றைய தினம் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, மருத்துவ குழுவினர், ஊரக வளர்ச்சித்துறையினர் ஆகியோர் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். எனவே அரசின் கொரோனா நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து இந்த போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கல்லல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிராவயல் மஞ்சுவிரட்டு குழு தலைவர் வேலுச்சாமி அம்பலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story